பெங்களூரு டாக்டருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
பெங்களூரு டாக்டருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஜெர்மன் விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
பெங்களூரு-
பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக இருப்பவர் கே.எஸ்.கிஷோர் (வயது 54). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மருத்துவ ஆலைசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர், அவர் ஓர்லாண்டோவில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு விமானம் மூலம் சென்றார். இந்த நிலையில் பிராங்க்பர்ட்டு விமான நிலையத்திற்கு, அவர் பயணித்த ஜெர்மன் விமானம் காலதாமதமாக வந்து சேர்ந்தது. இதையடுத்து அவர் பெங்களூருவுக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த விமானம் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையில் அதில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அந்த விமான நிலையத்தில் காத்திருந்து பின்னர், மற்றொரு விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார்.
இந்த நிலையில் அவர் பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஜெர்மன் விமானத்தின் அலட்சியப்போக்கால் பெங்களூருவுக்கு புறப்பட இருந்த விமானத்தை தவறவிட்டதாகவும், அதுகுறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஜெர்மன் நாட்டு விமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான், டாக்டரால் பெங்களூரு விமானத்தை பிடிக்க முடியவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே அந்த விமான நிறுவனம் சார்பில் கிஷோருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.