பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக ஆட்சி முடிவு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மும்பை,
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது. நாளுக்கு நாள் மத்திய பாஜக அரசு பிரபலமற்றதாக மாறி வருகிறது. இந்தியா கூட்டணி பிரபலமாகி வருகிறது.
இந்தியாவில் இதுவரை காணமுடியாத சர்வாதிகார ஆட்சியை நாம் கண்டு வருகிறோம். இந்தியாவின் மதச்சார்பின்மை, சமூக நீதியைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். இந்தியாவை பிரிக்க நினைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் எந்த சாதனைகளும் இல்லை. ரூ7.5 கோடி ஊழல் குறித்து சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணி என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளோம். புலனாய்வு அமைப்புகளை அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் அமைப்புகளாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி இந்தியா கூட்டணியின் சிறந்த விளம்பரதாரராக செயல்பட்டு வருகிறார். மத்திய பாஜக அரசை எதிர்த்து பெரிய போர்க்களத்திலே ஈடுபடவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.