நாளை வாக்கு எண்ணிக்கை மைசூரு மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதையொட்டி மைசூரு மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மைசூரு-
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதையொட்டி மைசூரு மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. மைசூரு மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. இந்த 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மைசூரு டவுன் படுவாரஹள்ளி பகுதியில் உள்ள மகாராணி கல்லூரியில், புதிய கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திர துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நாளை அங்கு வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணிக்கை
கல்லூரியில் உள்ள அறைகளில் இரும்பு கம்பிகள் மூலம் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு 14 மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருப்பதையொட்டி அந்த கல்லூரியைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், சோதனையாளர், வேட்பாளர்கள், நிருபர்கள் உள்ளிட்டோர் அமர்வதற்கு தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளின் வாக்குகளும் இங்கு எண்ணப்படுவதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அந்த கல்லூரிக்கு வருவார்கள் என்றும், அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுக்கடைகளை மூட உத்தரவு
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மகாராணி கல்லூரி அருகே போக்குவரத்துக்கு தடை உத்தரவும் பிறக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை இரவு 9 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வெற்றி அடைந்தவர்களுக்கு ஆதரவாக கோஷங்கள், முழக்கங்கள் எழுப்புவது, ஊர்வலம் நடத்துவது, வேட்பாளர்களுக்கு மாலை போடுவது, பட்டாசு வெடிப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.