சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பேடராயனபுரா:
பெங்களூரு பேடராயனபுரா அருகே ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(வயது 38). தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு அப்பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து வெளியே கூறாமல் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற தாய் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை சிறுமி கூறி உள்ளாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி பேடராயனபுரா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணப்பாவை போக்சோவில் கைது செய்தனர். இதற்கிடையே அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதியாகி உள்ளதால், கிருஷ்ணப்பாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.