'சட்டத்தின் பாதுகாவலர்களே சதிகாரர்களாக மாறிவிட்டனர்' - மேற்கு வங்காள கவர்னர்
சட்டத்தின் பாதுகாவலர்களே சதிகாரர்களாக மாறிவிட்டனர் என மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ந்தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்தா போஸ், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு நடந்த சம்பவம் மேற்கு வங்காளத்திற்கு மட்டுமின்றி, மனித குலத்திற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். இது ஒரு மிகப்பெரிய சீரழிவு.
சட்டத்தின் பாதுகாவலர்களே சதிகாரர்களாக மாறிவிட்டனர். காவல்துறையில் ஒரு சிலர் அரசியல்வாதிகளுடன் உடன்பட்டு, குற்றவாளிகளாக மாறிவிட்டனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அரசாங்கமே முழு பொறுப்பாகும். இரவு நேரங்களில் பணிக்கு செல்வோருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.