குஜராத்தில் 'பிபர்ஜாய்' புயல் இன்று கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


குஜராத்தில் பிபர்ஜாய் புயல் இன்று கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x

Image Courtacy: PTI

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் இன்று (வியாழக்கிழமை) மாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆமதாபாத்,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பிபர்ஜாய்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.

குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கடலோர மாவட்டங்களான கட்ச், தேவ்பூமி துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜூனாகத் ஆகியவற்றில் 25 செ.மீ.வரை கனமழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத் கடலோர மாவட்டங்களில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

எனவே புயல் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு வசித்து வரும் மக்களை வெளியேற்றும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று மாலை வரை 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதில் கட்ச் மாவட்டத்தில் இருந்து மட்டுமே 18 ஆயிரம் பேர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இதைப்போல ஜூனாகத், ஜாம்நகர், போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, மோர்பி, ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீட்புப்படைகள் தயார்

புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பெரும் படையே களமிறக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 15 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 12 குழுக்கள் பல்வேறு கடலோர மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதைப்போல புயல் சேதங்களை உடனடியாக சீரமைப்பதற்காக மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையை சேர்ந்த 115 குழுக்கள், மாநில மின்சாரத்துறையை சேர்ந்த 397 குழுக்கள் என நிவாரணக்குழுக்களும் களமிறக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-மந்திரி பூபேந்திர படேல் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

முப்படைகள் தயார்

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், புயல் மீட்பு நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'முப்படை தளபதிகளுடன் பேசி, பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள ஆயுதப்படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தேன். புயலால் நேரிடும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதில் அரசுக்கு உதவ ஆயுதப்படைகள் தயாராக உள்ளன' என குறிப்பிட்டு இருந்தார்.

பிபர்ஜாய் புயல் இன்று கரையை கடப்பதால் அந்த வழியாக செல்லும் 69 ரெயில்களை மேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. 58 ரெயில்களின் பயணதூரம் குறைக்கப்பட்டு உள்ளன.

பலத்த காற்றுடன் மழை

இதற்கிடையே பிபர்ஜாய் புயலின் தாக்கத்தால் குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் பிராந்தியத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

நேற்று காலையுடன் முடிவடைந்த முந்தைய 24 மணி நேரத்தில் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் அதிகபட்சமாக 121 மி.மீ., துவாரகாவில் 92 மி.மீ., கல்யாண்பூரில் 70 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதைப்போல ஜம்நகர், ஜூனாகத், ராஜ்கோட், போர்பந்தர் மற்றும் கட்ச் மாவட்டங்களும் 50 மி.மீ.க்கு அதிகமான மழையை பெற்றிருந்தன.


Next Story