'பிப்பர்ஜாய்' புயல் எதிரொலி: கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை
‘பிப்பர்ஜாய்’ புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் அரபிக்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
மங்களூரு:-
பிப்பர்ஜாய்' புயல்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் நிலவி வருகிறது. மாநிலத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெற்றுள்ளது.
இந்த புயலுக்கு 'பிப்பர்ஜாய்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், தீவிர புயலாகவும் வலுவடைந்து அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக கர்நாடகத்தில் கனமழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பரவலாக மழை
இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு, பெல்தங்கடி, சுள்ளியா, மூடபித்ரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மங்களூரு நகரில் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது.
உடுப்பி மாவட்டத்தில் உடுப்பி, கார்கலா, குந்தாப்புரா, பைந்தூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
உத்தரகன்னடா மாவட்டம் கார்கார், பட்கல், முருடேஸ்வர் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டியது. மேலும் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசியது.
கடல் சீற்றம்
மேலும் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடாவில் அரபிக்கடல் சீற்றத்துடனே காணப்பட்டது. குறிப்பாக மங்களூருவில் உல்லால், சோமேஸ்வரா, பெட்டம்பாடி பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாகவே இருந்தது. கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டிருந்த கற்களையும் தாண்டி ராட்சத அலைகள் எழுந்தது. ேமலும் கடற்கரையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது.
பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றாலும், மக்கள் பீதியில் உள்ளனர். 'பிப்பர்ஜாய்' புயல் காரணமாக அரபிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.