பங்காருபேட்டையில் நடிகர் உபேந்திராவிற்கு எதிராக தலித் சங்கத்தினர் போராட்டம்
பங்காருபேட்டையில் நடிகர் உபேந்திராவிற்கு எதிராக தலித் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் உபேந்திரா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோலார் தங்கவயல்:-
நடிகர் உபேந்திரா
கன்னட நடிகரும், உத்தம பிரஜாகிய கட்சியின் நிறுவனருமான உபேந்திரா தனது கட்சியின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். அப்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தலித் சமூகத்தை இழிப்படுத்தியும், அவதூறாகவும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தலித் அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெங்களூரு சி.கே.அச்சுகட்டு போலீசில் நடிகர் உபேந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகர் உபேந்திரா தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதி உபேந்திரா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
தலித் சங்கத்தினர் போராட்டம்
இந்தநிலையில் கோலார் தங்கவயலை அடுத்த பங்காருபேட்டையில் தலித் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தலித் சங்க மாநில தலைவர் ஹூவரசனஹள்ளி ராஜப்பா என்பவர் தலைமை தாங்கினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தலித் அமைப்பினர் குறித்து இழிவான கருத்துகளை நடிகர் உபேந்திரா பதிவிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
எத்தனை சட்டங்கள் தலித்துகளை பாதுகாப்பதற்கு இருந்தாலும், தற்போது அந்த சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதற்கு தலித் அமைப்பினர் சார்பில் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இனி இதுபோல் யாரும் பேச கூடாது. எனவே இது தொடர்பாக நடிகர் உபேந்திரா மீது தாசில்தார் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்றனர்.
இதையடுத்து தாசில்தார் ரஷ்மியை சந்தித்த தலித் சங்கத்தை சேர்ந்தவர்கள், இதுகுறித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அதை வாங்கிய தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து தலித் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.