பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மந்தமானது


பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மந்தமானது
x

பெங்களூருவில் 5-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆனால் அந்த பணிகளும் மந்தமாகவே நடைபெற்றது.

பெங்களூரு:

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மந்தமானது

பெங்களூருவில் மழை பாதிப்புக்கு காரணமான ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பெங்களூரு மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதிகளில் மட்டுமே நடந்த பணிகள், நேற்று முன்தினம் எலகங்கா மற்றும் தாசரஹள்ளி மண்டலங்களிலும் நடைபெற்றது. கடந்த 4 நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளினார்கள்.

இந்த நிலையில், நேற்று 5-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றாலும், அந்த பணிகள் மந்தமாகவே நடைபெற்றது. அதாவது எலகங்கா மண்டலத்தில் நேற்று முன்தினம் 11 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு இருந்தது. நேற்று வெறும் 2 ஆக்கிரமிப்புகள் மட்டுமே இடித்து அகற்றப்பட்டது. சிங்காபுரா ஏரியையொட்டி அமைந்துள்ள ஒரு ராஜகால்வாய் ஆக்கிரமிப்பையும், அதே பகுதியில் உள்ள லேண்ட் மார்க் குடியிருப்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த காம்பவுண்டு சுவரை மட்டுமே இடித்து அகற்றினார்கள்.

பாரபட்சம் பார்க்கப்படாது

மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மகாதேவபுரா மண்டலத்தில் எந்த ஆக்கிரமிப்புகளும் நேற்று அகற்றப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த மண்டலத்தில் எங்கெல்லாம் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு மட்டுமே நடத்தி, அவற்றை இடித்து அகற்றுவதற்காக கட்டிடங்களில் வெறும் குறியீடுகளை மட்டுமே செய்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் சென்றாா்கள்.

பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், இதில் எந்த விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.


Next Story