கதவு, ஜன்னல் பிளாஸ்டிக் கவரால் அடைப்பு - வீடு முழுக்க விஷ வாயு செலுத்தி தாய்-மகள்கள் தற்கொலை; பரபரப்பு கடிதம்


கதவு, ஜன்னல்களை பிளாஸ்டிக் கவரால் அடைத்துவிட்டு வீடு முழுக்க விஷ வாயு செலுத்தி தாய்-மகள்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

புதுடெல்லி,

தலைநகர் புதுடெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 207வது வீட்டில் மஞ்சு (50 வயது) என்ற பெண் தனது இரு மகள்களான அன்ஷிகா, அன்கு வசித்து வந்தார். மஞ்சுவின் கணவன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். அதில் இருந்தே மஞ்சு மற்றும் இரு மகள்களும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், மஞ்சு வீடு நேற்று முன் தினம் மாலை நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மஞ்சு வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து, குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் ஒரு அறையில் மஞ்சு மற்றும் அவரின் மகள்களான அன்ஷிகா, அன்கு என 3 பேரும் பிணமாக கிடந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு அதில் இருந்து கியாஸ் வாயு வீடு முழுவதும் வீசியுள்ளது. வீட்டின் கதவு ஜன்னல்கள் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டிருந்தது.

மேலும், வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் திடுக்கிடும் தகவல்களை மஞ்சு எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் வீட்டிற்குள் நுழையும் யாரும் தீக்குச்சியை பற்றவைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் வீடு முழுவதும் தீயில் கருகி விடும் என எழுதிவைக்கப்பட்டுள்ளது.

'அதிக அளவிலான ஆபத்தை ஏற்படுத்திய வாயு கார்பன் மோனாக்சைடு வீடு முழுவதும் பரவி உள்ளது. அது தீப்பற்றக்கூடும். தயவு செய்து வீட்டின் கதவு, ஜன்னல்கள், காற்றுப்போக்கியை திறந்துவிடுங்கள். தீக்குச்சி, மெழுகுவர்த்தி என எதையும் பற்றவைக்க வேண்டாம்.

பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டுள்ள திரையை கவனமாக நீக்குங்கள் எனென்றால் அறை முழுவதும் ஆபத்தை விழைவிக்கக்கூடிய வாயு உள்ளது. அதை சுவாசிக்காதீர்கள்'என எழுதப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கவனமாக செயல்பட்டு வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவரால் அடைக்கப்பட்டிருந்த கதவு, ஜன்னல்களை திறந்து வாயு வெளியேற செய்தனர்.

கதவு, ஜன்னலை பிளாஸ்டிக் கவரால் காற்று புகாத அளவுக்கு மூடிவிட்டு வீட்டில் இருந்த இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே விறகு அடுப்பில் தீ வைத்து புகையை உண்டாகியுள்ளனர். அந்த புகை சமையல் கியாஸ் சிலிண்டர் வாயுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவாக மாறியுள்ளது. அந்த விஷவாயு வெளியே செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளது. அந்த விஷவாயுவை சுவாசித்த மஞ்சு மற்றும் அவரின் மகள்களான அன்ஷிகா, அன்கு மூச்சுதிணறி உயிரிழந்துள்ளனர்.


Next Story