சரவணபெலகோலா ஜெயின் மடாதிபதி மரணம்


சரவணபெலகோலா ஜெயின் மடாதிபதி மரணம்
x

புகழ் பெற்ற சரவணபெலகோலா ஜெயின் மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக் சுவாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சந்திரகிரி மலையில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஹாசன்:

ஜெயின் மடாதிபதி

ஹாசன் மாவட்டம் சரணவெனபெலகோலாவில் புகழ்பெற்ற ஜெயின் மடம் உள்ளது. இந்த மடத்தின் கீழ் தான் பிரசித்தி பெற்ற கோமதீஸ்வரர் கோவில் செயல்பட்டு வருகிறது.

இந்த மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் சாருகீர்த்தி பட்டாரக் சுவாமி (வயது 73). இவரது இயற்பெயர் ரத்னவர்மா.

உடல் நலக்குறைவால் மரணம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காணரமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மடத்தின் நிர்வாகிகள் அவரை பேளூர் ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் நேற்று மடத்தில் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

இவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை சந்திரகிரி மலையில் அவரது உடல் ஜெயின் மத முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்த சுவாமி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாழ்க்கை குறிப்பு

மறைந்த மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக் சுவாமி தட்சிண கன்னடா மாவட்டம் வரங்கா கிராமத்தில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி பிறந்தார். கல்வியில் அதிகளவு ஆர்வம் கொண்ட இவர், மைசூரு பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு கன்னட, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசகூடியவர். மேலும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து வந்தார்.

இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கென்யா ஆகிய நாடுகளுக்கு சென்று சொற்பொழிவாற்றியுள்ளார். கடந்த 1970-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி முதல் சரவணபெலகோலா ஜெயின் மடத்தின் மடாதிபதியாக சாருகீர்த்தி பட்டாரக் சுவாமி பொறுப்பு வகித்து வந்தார். ஆன்மிகம் மற்றும் சுற்றுலாவிற்கு சிறந்த நகரமாக விளங்கும் சரவணபெலகோலாவை கல்வி மையமாக மேம்படுத்தவேண்டும் என்ற கனவு இவருக்கு இருந்தது.

முற்போக்கு சிந்தனையாளர்

மேலும் சுற்றுலாத்துறையிலும் சிறந்து விளங்க செய்யவேண்டும் என்று ஆசையும் இருந்தது. இதற்காக சரவணபெலகோலாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வந்தார். இவர் சரவணபெலகோலாவில் ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரியை தொடங்கினார்.

இன்று வரை அந்த கல்லூரி ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. ஆன்மிகவாதி மட்டுமில்லாமல் முற்போக்கு சிந்தனையாளராகவும் திகழ்ந்து வந்தார். மக்களிடம் அகிம்சை, தியாகம் மற்றும் அமைதி குறித்து அதிகப்படியாக பேசுவார். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவரை ஆன்மிக வழிகாட்டியாக ஏற்று கொண்டனர்.

1981-ம் ஆண்டில் முதன் முதலாக சரவணபெலகோலா ஜெயின் கோவிலில் மகாமஸ்தாபிஷேக விழா நடத்தினார். தொடர்ந்து 4 முறை மகாமஸ்தாபிஷேக விழா நடத்திய பெருமை அவரை சாரும்.


Next Story