சாலை மேம்பாடு, தெருவிளக்குகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் குறித்து நிர்வாக அதிகாரி மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு:-
ஆலோசனைகளை கேட்டறிந்தார்
கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் பெங்களூருவை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து அவர் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
இதில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேசுகையில், "பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது மாநகராட்சியின் பொறுப்பு. இதை மனதில் கொண்டு சாலை, நடைபாதைகள் பராமரிப்பு, பூங்காக்களில் இருக்கை வசதிகள், தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற பல்வேறு விஷயங்களை மனதில் நிறுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்" என்றார்.
மாநகராட்சி பட்ஜெட்
அதைத்தொடர்ந்து பேசிய நிதித்துறை சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராயபுரா பேசும்போது, "மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாங்கள் கடந்த ஒரு மாதமாக அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். 243 வார்டுகளில் இருந்தும் மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளோம். கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்தில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்கள், ஏரிகள் பராமரிப்பு, சாலைகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்" என்றார்.
மேலும் இந்த கூட்டத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளை அறவே அகற்றுவது, ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்குவது, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, நூலகம் போன்றவற்றிற்கு வரி வசூலிக்கப்படுகிறது. அந்த நிதியை அவர்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதை உறுதி செய்வது, சாலைகளை அகலப்படுத்த நிதி ஒதுக்குவது, ராஜகால்வாய்களை சரியான முறையில் நிர்வகிப்பது, நடைபாதைகளை மேம்படுத்த நிதி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அஸ்வத் நாராயண்
இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், எம்.எல்.ஏ.க்கள் ரவி சுப்பிரமணியா, உதய் கருடாச்சார், அகண்ட சீனிவாச மூர்த்தி, எம்.எல்.சி.க்கள் பி.ஆர்.ரமேஷ், புட்ண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.