டிராக்டர்களுக்கு தடை விதித்திருப்பதால் மாநகராட்சியில் மினி சரக்கு வாகனங்களை பயன்படுத்த முடிவு; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூருவில் டிராக்டர்களுக்கு தடை விதித்திருப்பதால் மாநகராட்சியில் மினி சரக்கு வரகனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
டிராக்டர்களுக்கு தடை
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண அரசும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக டிராக்டர்கள் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிராக்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், பிரமாண்ட போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியும் டிராக்டர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மினி சரக்கு வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. நகரில் உள்ள 243 வார்டுகளுக்கும் தலா ஒரு மினி சரக்கு வாகனம் தேவையாகும். தற்போது டிராக்டரை பயன்படுத்துவதால், ஒரு டிராக்டருக்கு மாதம் ரூ.1 லட்சத்தை மாநகராட்சி செலவு செய்து வருகிறது. ஆனால் மினி சரக்கு வாகனத்தை பயன்படுத்துவதன் மூலம் செலவு குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மினி சரக்கு வாகனங்கள்
இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூருவில் டிராக்டர்கள் ஓடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே மாநகராட்சியும் டிராக்டர்களுக்கு பதிலாக மினி சரக்கு வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் மினி சரக்கு வாகனங்களை பயன்படுத்த மாநகராட்சி தீர்மானித்துள்ளது. அதனால் மார்ச் மாதம் இறுதி வரை டிராக்டர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி பெங்களூரு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்படும்', என்றார்.