டெல்லி: சாந்தினி செளக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து
டெல்லி சாந்தினி செளக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது
புதுடெல்லி,
டெல்லி சாந்தினி செளக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு 10.40 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரி கூறுகையில், 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால், தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. விபத்து ஏற்பட்ட கட்டிடம் 4 மாடிகளை கொண்டது. அதில் அதிக அளவு துணிகள் உள்ளன. இதனால், தீயை முழுவதுமாக அணைக்க நீண்ட நேரம் ஆகும்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.