டெல்லி: பிளைவுட் கடையில் பயங்கர தீ விபத்து
பிளைவுட் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள காந்திநகர் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள பிளைவுட் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 21 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். தீ அங்குள்ள மற்ற கடைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் உயிர்ச்சேதமோ யாருக்கும் எந்த வித காயமோ ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், எனது சகோதரர் தான் எனக்கு தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தார். அதிகாலை நேரம் என்பதால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய என்னுடைய சகோதரர் கடை தீப்பற்றி எரிவதாக கூறினார். நான் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தேன். காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர் என கூறினார்.
தீ விபத்து குறித்து பேசிய அதிகாரி ராஜேந்திர அத்வல் கூறுகையில், 'அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு 21 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தோம். தீ விபத்து ஏற்பட்டது பிளைவுட் கடை என்பதால் அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும் அந்த கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்கள் எற்பட்டுள்ளன' என கூறினார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல் டெல்லியில் மற்றொரு தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. மாயாபுரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையின் தரை தளத்தில் நள்ளிரவு 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 வண்டிகளில் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த தீ விபத்தில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த 9 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.