பஞ்சாப் விவசாயிகள் மறியலால் ரெயில் சேவை பாதிப்பு


பஞ்சாப் விவசாயிகள் மறியலால் ரெயில் சேவை பாதிப்பு
x

டெல்லி செல்லும் ரெயில்கள் சண்டிகர் வழியாகவும், அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் பகுதிக்கு செல்லும் ரயில்கள் லோஹியன் காஸ் பகுதிக்கும் திருப்பி விடப்பட்டன.

லூதியானா,

டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப்பில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். ஆனால், அரியானா மாநில அரசு, பஞ்சாப்-அரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும், தடா சிங்க்வாலா-கானாரி எல்லையிலும் ஏராளமான தடுப்புகளை அமைத்திருந்தது.

தடுப்புகளை விவசாயிகள் அகற்ற முயன்றபோது, அவர்கள் மீது அரியானா போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். 2 இடங்களிலும் இந்த தாக்குதல் நடந்தது. இதில், பல விவசாயிகள் காயமடைந்தனர். விவசாயிகள் நடத்திய கல்வீச்சில், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 24 போலீசார் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் ஷாம்பு எல்லையிலேயே கூடாரங்கள் அமைத்து நேற்று முன்தினம் இரவு தங்கி விட்டனர். தங்கள் டிராக்டர்களை பஞ்சாப் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைத்தனர். இந்த நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதிய கிஷான் யூனியன் (எக்தா உக்ரஹான்) மற்றும் பிகேயு தகுன்தா (தனேர்) அமைப்புகள் பஞ்சாப்பில் இன்று நான்கு மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனர். இந்த மறியல் போராட்டம் மாலை 4 மணி வரை நடந்தது. டெல்லி அமிர்தசரஸ் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதனால் ரெயில்வே அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்களை வேறு வழித்தடத்தில் திருப்பி விட்டனர். டெல்லி செல்லும் ரெயில்கள் சண்டிகர் வழியாகவும், அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் பகுதிக்கு செல்லும் ரயில்கள் லோஹியன் காஸ் பகுதிக்கும் திருப்பி விடப்பட்டன.


Next Story