மதுபான கொள்கை முறைகேடு: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சொத்து உள்பட ரூ.72 கோடி சொத்து பறிமுதல்


மதுபான கொள்கை முறைகேடு: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சொத்து உள்பட ரூ.72 கோடி சொத்து பறிமுதல்
x

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சொத்து உள்பட ரூ. 72 கோடி சொத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

டெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, மதுபான கொள்கையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக தனியாருக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கி சலுகைகளை தாராளமாக தந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக துணை நிலை கவர்னர் பரிந்துரையில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இதில் கலால்துறையை தன் வசம் வைத்துள்ள டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் அந்த கொள்கை முடிவுகள் செயல்படுத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டன.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பணமோசடியும் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐயுடன் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்மந்திரியுமான மனீஷ் சிசோடியா, தெலுங்கானா முதல்-மந்திரியின் மகளும், எல்.எல்.ஏ.வுமான கவிதாவின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் மனீஷ் சினோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

அதேவேளை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதுவரை 6 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சி தகவல்தொடர்புத்துறை பொறுப்பாளர் விஜய், மதுபான நிறுவனங்களின் தொழிலதிபர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி விஜய் உள்பட கைது செய்யப்பட்டவர்களில் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் 72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.


Next Story