டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி டிக்கெட் பணத்துக்கு விற்பனை - வீடியோ வெளியிட்டு பா.ஜனதா குற்றச்சாட்டு
டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆம் ஆத்மி டிக்கெட்டுகள், பணத்துக்கு விற்கப்படுவதாக ரகசிய வீடியோவை வெளியிட்டு பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், வடமேற்கு டெல்லியின் ரோகிணி டி வார்டில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட அக்கட்சியை சேர்ந்த பிந்து என்பவரிடம் ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ரகசிய வீடியோவை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இந்த வீடியோவை பிந்துவே ரகசியமாக எடுத்துள்ளார்.
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, ரகசிய வீடியோவை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆம் ஆத்மியும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஊழலில் ஊறித் திளைத்துள்ளனர். ரோகிணி டி வார்டில் போட்டியிட ஆம் ஆத்மி பொறுப்பாளர்கள் பதானியா, புனித் கோயல் உள்ளிட்டோருடன் பிந்து பேசுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
பணம் கொடுப்பது பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். ரூ.80 லட்சம் கேட்கிறார்கள். இந்த பொறுப்பாளர்கள், ஆம் ஆத்மி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் 5 பேர் குழுவுடன் தொடர்புடையவர்கள் ஆவர். பணம் அடிப்படையில் கொடுப்பதற்காக 110 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு இருப்பது வீடியோ மூலம் தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகசிய வீடியோவை எடுத்த பிந்து கூறியதாவது:-
ஆம் ஆத்மி தலைவர்கள், அடிமட்ட தொண்டர்களை புறக்கணித்து விட்டு, பணக்காரர்களுக்கு டிக்கெட்டுகளை விற்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் இதை செய்யவில்லை. கீழ்மட்டத்தில் இருந்து மேலிடம்வரை அனைவரும் சம்பந்தப்பட்டு உள்ளனர். துர்கேஷ் பதக் என்பவரிடம் நான் புகார் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி நிராகரித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ. திலீப் பாண்டே கூறியதாவது:-
அந்த வீடியோ போலியானது. தோல்வி பயத்தில் பா.ஜனதா தினந்தோறும் பொய் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள்தான் டிக்கெட்டை பணத்துக்கு விற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.