உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் - டெல்லி முதலிடம், கொல்கத்தாவுக்கு 2வது இடம்
பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி முதல் இடத்தில் உள்ளது
வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்ன் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வது இடத்தில் உள்ளது.
உலகளவில் 7,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் பிஎம் 2.5 மற்றும் என்ஓ2 ஆகிய இரண்டு தீங்கு விளைவிக்கும் மாசுகள்தான் காற்றில் அதிக அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி முதல் இடத்தில் உள்ளது .அடுத்து கொல்கத்தா (இந்தியா ), கனோ (நைஜீரியா), லிமா (பெரு), டாக்கா (வங்கதேசம்), ஜகர்தா (இந்தோனேசியா), லாகோஸ் (நைஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), பெய்ஜிங் (சீனா) மற்றும் அக்ரா (கானா) ஆகிய நகரங்கள் உள்ளன.
என்ஓ2 அதிகம் காற்றில் கலந்து பாதிக்கப்பட்ட நகரங்களில் உலகளவில் ஷாங்காய், மாஸ்கோ, டெஹ்ரான் (ஈரான்), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா), பெய்ஜிங் (சீனா), கெய்ரோ (எகிப்து), அஸ்கபத் (துர்க்மெனிஸ்தான்), மின்ஸ்க் (பெலாரஸ்), இஸ்தான்புல் (துருக்கி), ஹோ சி மின் சிட்டி (வியட்நாம்) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.