குளிரில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் தீ மூட்டிய குடும்பத்தினர் - புகையால் மூச்சுத்திணறி தாய், மகன் பலி


குளிரில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் தீ மூட்டிய குடும்பத்தினர் - புகையால் மூச்சுத்திணறி தாய், மகன் பலி
x
தினத்தந்தி 29 Jan 2024 6:38 PM IST (Updated: 30 Jan 2024 12:51 PM IST)
t-max-icont-min-icon

கடும் குளிர் நிலவி வருவதால் கதகதப்பாக இருக்க வீட்டுக்குள் தீமூட்டியுள்ளனர்.

டெல்லி,

தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, இரவுநேரங்களில் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில் குளிரில் இருந்து தப்பிக்கவும், கதகதப்பாக இருக்கவும் மக்கள் வீடுகளில் தீ மூட்டுவது வழக்கம்.

இதனிடையே, தலைநகர் டெல்லியின் மெய்டன் கர்ஹி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி அஞ்சலி (23). இந்த தம்பதிக்கு திவன்ஷ் (6), திவான்ஷி (4), ஷம்பு (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடும்குளிர் காரணமாக கதகதப்பாக வைத்துக்கொள்ள தினேஷ் நேற்று இரவு வீட்டில் தீ மூட்டியுள்ளார். தீ மூட்டியபோதும் அதில் இருந்து புகைவெளியேற முடியாதவகையில் வீட்டின் ஜன்னல், கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு குடும்பத்தினர் இரவு உறங்கியுள்ளனர்.

இரவு அனைவரும் உறங்கியநிலையில் வீட்டில் மூட்டிய தீயில் இருந்து வெளியேறிய புகை வெளியே செல்லமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அந்த புகையை உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் சுவாசித்துள்ளனர். இதில், அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராதது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்துவந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். அங்கு தினேஷ், அவரது மனைவி அஞ்சலி, குழந்தைகள் என 5 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதையடுத்து, அனைவரையும் மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அஞ்சலி மற்றும் அவரது மகன் ஷம்பு ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story