யமுனை ஆற்றின் நீர்மட்டம் குறைய தொடங்கியது வெள்ளத்தை சமாளிக்க ராணுவ உதவியை கேட்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டு வாயிலில் தண்ணீர் தேக்கம்
டெல்லியை அடைந்த அந்த தண்ணீரால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
புதுடெல்லி,
வெள்ளத்தை சமாளிக்க ராணுவ உதவியை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். அதே சமயத்தில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
ெடல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இமாசலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் அரியானா மாநிலத்துக்கு தண்ணீர் வந்ததால், அரியானா மாநில அரசு, யமுனையில் அதிகமான தண்ணீர் திறந்து விட்டது.
டெல்லியை அடைந்த அந்த தண்ணீரால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. டெல்லி குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது.
நேற்று முன்தினம் மாலை யமுனை நீர்மட்டம் தொடர்ந்து 3 மணி நேரமாக மாற்றமின்றி இருந்தது. அதன்பிறகு மீண்டும் உயரத் தொடங்கியது. மாலை 7 மணிக்கு 208.66 மீட்டராக உயர்ந்தது.
ஆனால், அதன்பிறகு நீர்மட்டம் குறைய தொடங்கியது. நேற்று அதிகாலையில், 208.57 மீட்டராக குறைந்தது. படிப்படியாக குறைந்து, நேற்று பிற்பகல் 3 மணியளவில் 208.25 மீட்டராக சரிந்தது.
இருப்பினும், டெல்லியின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டு நுழைவாயிலிலும் நேற்று தண்ணீர் தேங்கியது. மக்கள் நெரிசல் மிகுந்த வருமானவரித்துறை அலுவலக சந்திப்பு மற்றும் கடமை பாதை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
வருமானவரித்துறை அலுவலக சந்திப்பு பகுதியை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நேரில் பார்த்தனர். பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சிலர், தண்ணீர் நிறைந்த சாலைகளில் தங்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, இதுவரை தண்ணீர் தேங்காத பகுதிகளில் தண்ணீர் நுழைவதை தடுக்க ராணுவத்தின் உதவியை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.
இதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையிடம் உதவி கேட்டு கடிதம் எழுதுமாறு தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.