பால் விலை உயர்வு கோரிக்கையை நிராகரித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், பால் கூட்டமைப்புகளின் கோரிக்கையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிராகரித்துள்ளார். பால் விலையை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பால் கூட்டமைப்புகள் கோரிக்கை
கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பெங்களூருவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பால் விலையை உயர்த்துவது குறித்து கர்நாடக பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் ஆலோசித்து இருந்தனர். அப்போது ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.4 உயர்த்த வேண்டும் என்று தலைவர்கள் தெரிவித்தாா்கள். இதுபற்றி அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பசுக்களுக்கான தீவனங்களின் விலை உயர்ந்திருப்பதால், பால் விலையை ரூ.4 உயர்த்த வேண்டும், இல்லையெனில் ரூ.3 அல்லது ரூ.2 ஆவது உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, கடந்த வாரம் பால் விலை ரூ.3 உயர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
பசவராஜ் பொம்மை நிராகரிப்பு
இந்த நிலையில், கர்நாடக பால் கூட்டமைப்புகள் சார்பில் அரசுக்கு விடுக்கப்பட்டு இருந்த கோரிக்கையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிராகரித்து இருக்கிறார். அதாவது பால் விலையை உயர்த்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடக பால் கூட்டமைப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக அந்த அமைப்புகளின் தலைவர்களுடன், பசவராஜ் பொம்மை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், தற்போது பாலின் விலையையும் உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது பால் கூட்டமைப்பு லாபகரமாக செயல்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அரசு பஸ்களில் டிக்கெட் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே பால் விலையை உயர்த்துவது தற்போது வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கர்நாடக பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.