ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கலெக்டர் அலுவலக ஊழியர் கைது


ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கலெக்டர் அலுவலக ஊழியர் கைது
x

நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் வாங்கிய துணை தாசில்தார், கலெக்டர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு கலெக்டர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

நிலப்பிரச்சினையை தீர்க்க...

பெங்களூரு கூட்லு பகுதியை சேர்ந்தவர் அசாம் பாஷா. இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்க உதவும்படி பெங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் சிலரிடம் அசாம் பாஷா கேட்டு இருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றும் மகேஷ், அலுவலக ஊழியர் சந்துரு ஆகியோர் ரூ.15 லட்சம் கொடுத்தால் நிலப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளனர்.

ஊழல் தடுப்பு படையில் புகார்

இதுதொடர்பாக மகேசும், சந்துருவும் அடிக்கடி அசாம் பாஷாவிடம் செல்போனிலும் பேசி உள்ளனர். இதனால் லஞ்சம் கொடுக்க அசாம் பாஷா ஒப்புக்கொண்டார். மேலும் முதல் தவணையாக ரூ.5 லட்சம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு மகேசும், சந்துருவும் சம்மதம் தெரிவித்து இருந்தனர். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசாம் பாஷா, மகேஷ் மற்றும் சந்துரு மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்தார்.

மேலும் மகேசும், சந்துருவும் பேசிய செல்போன் ஆடியோ பதிவுகளையும் அசாம் பாஷா, ஊழல் தடுப்பு படையினரிடம் கொடுத்து இருந்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு படையினர் அறிவுரையின்பேரில் அசாம் பாஷா, ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மதியம் சந்துருவை சந்தித்த அசாம் பாஷா ரூ.5 லட்சத்தை கொடுத்தார்.

துணை தாசில்தார் கைது

அந்த பணத்தை வாங்கி சந்துரு எண்ணி கொண்டு இருந்த போது அவரை ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன்பின்னர் துணை தாசில்தார் மகேசும் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் மகேஷ், சந்துரு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். மகேஷ், சந்துரு கைது செய்யப்பட்ட போதும், ஊழல் தடுப்பு படையினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்திய போதும் பெங்களூரு கலெக்டர் மஞ்சுநாத் அலுவலகத்தில் தான் இருந்தார்.

இதற்கிடையே அசாம் பாஷா, கலெக்டர் மஞ்சுநாத் மீதும் ஊழல் புகார் கூறினார். ஆனால் தகுந்த ஆதாரமின்றி கலெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி அசாம் பாஷாவின் புகாரை ஊழல் தடுப்பு படையினர் ஏற்க மறத்துவிட்டனர். கைதான சந்துரு, மகேஷ் மீது ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story