கர்நாடகத்தில் இரும்பு தாது உற்பத்திக்கு, விதித்த கட்டுப்பாடு தளர்வு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கர்நாடகத்தில் இரும்பு தாது உற்பத்திக்கு, விதித்த கட்டுப்பாடு தளர்வு-  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கர்நாடகத்தில் இரும்பு தாது உற்பத்திக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் இரும்பு தாது உற்பத்திக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரும்பு தாது உற்பத்தி

கர்நாடகத்தில் பல்லாரி, சித்ரதுர்கா, துமகூரு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் இரும்பு தாது உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, அந்த மூன்று இடங்களிலும் இரும்பு தாது உற்பத்திக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. அதாவது, துமகூரு, சித்ரதுர்காவில் ஆண்டுக்கு தலா 70 லட்சம் டன் இரும்பு தாதும், பல்லாரியில் 280 லட்சம் டன் இரும்பு தாது மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாட்டை தளர்த்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு கூறியது. அதில் இரும்பு தாது உற்பத்திக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

அதாவது பல்லாரியில் ஆண்டுக்கு 350 லட்சம் டன் இரும்பு தாதும், துமகூரு, சித்ரதுர்காவில் தலா 150 லட்சம் டன் இரும்புதாதும் உற்பத்தி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் இரும்பு தாது உற்பத்தி நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் கர்நாடக அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 3 இடங்களில் உற்பத்தி ஆகும் இரும்பு தாது ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை கடந்த மே மாதம் விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரும்பு தாது உற்பத்தியுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story