வளர்ச்சி திட்ட நிதி ரூ.20 லட்சம் கையாடல்: செல்லகெரே தாசில்தார் மீது வழக்குப்பதிவு
வளர்ச்சி திட்ட நிதி ரூ.20 லட்சத்தை கையாடல் செய்த செல்லகெரே தாசில்தார் மீது கலெக்டர் திவ்யாபிரபு உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு-
வளர்ச்சி திட்ட நிதி ரூ.20 லட்சத்தை கையாடல் செய்த செல்லகெரே தாசில்தார் மீது கலெக்டர் திவ்யாபிரபு உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம் கையாடல்
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாசில்தாராக இருப்பவர் ரகுமூர்த்தி. இந்த நிலையில் அவர், பசல்பீமா உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.20 லட்சத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கலெக்டர் திவ்யாபிரபுவுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யாபிரபு உத்தரவிட்டார்.
அதன்பேரில் அதிகாரிகள் கையாடல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தாசில்தார் ரகுமூர்த்தி, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் மும்தாஜ் உன்னீஸ், சிராஜ் உல்உசேன் ஆகியோர் சேர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஒதுக்கிய நிதி ரூ.20 லட்சத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை அறிக்கையை கலெக்டர் திவ்யாபிரபுவிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், தாசில்தார் ரகுமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு கலெக்டர் திவ்யாபிரபு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ரகுமூர்த்திக்கு உடந்தையாக இருந்த கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் மும்தாஜ் உன்னீஸ், சிராஜ் உல்உசேன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தாசில்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் ெவளியாகி உள்ளது. மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.