மராட்டிய முதல்-மந்திரியாகிறார் தேவேந்திர பட்னாவிஸ்..?


மராட்டிய முதல்-மந்திரியாகிறார் தேவேந்திர பட்னாவிஸ்..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 29 Jun 2022 11:52 PM IST (Updated: 29 Jun 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் ஜூலை 1ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு சிவசேனா கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்களின் அதிருப்தி காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து மராட்டிய கவர்னர் கோஷியாரி நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

கவர்னரின் உத்தரவு சட்டவிரோதமானது என அதனை எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு அவசர மனுவாக விசாரித்தது. அதில் மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை இல்லை என சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளம் மூலம் பேசிய உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார். சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து அவர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் ஜூலை 1ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தற்போது எதிர்கட்சித் தலைவராக உள்ளார். மேலும் துணை முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story