நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால்
13 மக்களவை தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,
"நான் இன்று உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். இது மத்திய அரசுக்கான தேர்தல். மத்தியில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே 13 மக்களவை தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுங்கள். அப்போது தான் உங்கள் உரிமைகளை மையத்தில் இருந்து கொண்டு வரலாம்.
நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இரு நாட்களுக்கு முன் லூதியானாவுக்கு வந்த உள்துறை மந்திரி அமித்ஷா, ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பகவந்த் மான் பதவியிருந்து நீக்கப்படுவார் என்று கூறினார். அவர்கள் இலவச மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள். எனவே, ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவாக போடக்கூடாது. அனைத்து வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போட வேண்டும். பஞ்சாப்புக்கு கிடைக்க வேண்டிய ரூ.9,000 கோடி நிதி அவர்களால் (பா.ஜ.க) தடுத்து நிறுத்தப்பட்டது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.