கர்நாடகத்தில் கல்லூரிகளில் கற்றல்-கற்பித்தல் டிஜிட்டல்மயம்
கர்நாடகத்தில் கல்லூரிகளில் கற்றல்-கற்பித்தல் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் கல்லூரிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இதை விரைவில் தனியார் கல்லூரிகளுக்கு விஸ்தரிப்போம். மாநிலத்தில் உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது உயர்கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைத்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தொழில்முனைவு ஆர்வம் ஏற்படுத்தப்படுகிறது.
பொறியியல் கல்லூரி நிர்வாகம், பாடத்திட்டம் உள்ளிட்ட விஷயங்களில் சீர்திருத்தம் செய்யப்படுகிறது. பயிற்சியின்போது என்ஜனீயரிங் மாணவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். தரமா கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வாய்ப்புகள் நம் கைவிட்டு போய்விடும். இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார். இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.