சித்தராமையாவை கண்டு நடுங்கும் பா.ஜனதா; தினேஷ் குண்டுராவ் கருத்து
சித்தராமையாவை கண்டு பா.ஜனதா நடுங்குவதாக தினேஷ் குண்டுராவ் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சக்லேஷ்புராவில் திருமண தினத்தன்றே அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். அது அவர்களின் உணவு கலாசாரம். மலைநாடு மாவட்டங்களில் எல்லா பண்டிகை நாட்களிலும் அசைவ உணவு சமைத்து சாப்பிடுகிறார்கள். அந்த மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி அன்றே அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இதை சி.டி.ரவி, பிரதாப் சிம்ஹாவால் நிராகரிக்க முடியுமா?.
அசைவு உணவு தொடர்பாக பா.ஜனதாவினர் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள். சித்தராமையா இருக்கட்டும் அல்லது வேறு யாராவது இருக்கட்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து பா.ஜனதாவின் அனுமதி பெற வேண்டுமா?. நமது உணவு நமது உரிமை. இதை கேட்க பா.ஜனதாவினருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. சித்தராமையாவை கண்டு பா.ஜனதாவினருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சாப்பிடும் உணவு மற்றும் உடுத்தும் உடைகளை வைத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடுவது தவறு என்றால், அந்த உணவு சாப்பிடுகிறவர்கள் பா.ஜனதாவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லட்டும். இவ்வாறு கூற பா.ஜனதாவுக்கு தைரியம் உள்ளதா?.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டுள்ளார்.