பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி


பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி
x
தினத்தந்தி 4 July 2023 2:35 AM IST (Updated: 4 July 2023 2:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, கல்வி பயின்று முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெங்களூரு:-

டாக்டர்கள்-நர்சுகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பெங்களூரு வந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்தும், மைசூரு தலைப்பாகை அணிவித்தும் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சிக்பள்ளாப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்ற சத்யசாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் திரவுபதி முர்மு கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மலைவாழ் இனத்தை சேர்ந்த 43 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் தற்போது மலைவாழ் இடங்களில் வசிப்பவர்களில் 50 ஆயிரம் பேர் டாக்டர்கள், நர்சுகள், பி.எச்.டி. முடித்தவர்கள் இருப்பதை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது நாட்டில் தற்போது மலைவாழ் பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 28 லட்சம் ஆகும்.

நிதானமாக முன்னேற்றம்

இவர்களில் 75 இனங்கள் உண்மையான மலைவாழ் மக்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டு வசதி, விவசாய நிலம் ஒதுக்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்வது உள்ளூர் நிர்வாகங்களின் கடமை ஆகும். சாலைகள், பள்ளிகள், சுகாதார வசதிகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. மலைவாழ் மக்களிடையே காசநோய் உள்ளிட்ட நோய்களை போக்க மத்திய பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பானது.

இந்த மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் கர்நாடகத்திற்கும் நிதி வந்திருக்க வேண்டும். அந்த நிதியில் அந்த மக்களுக்கு சாலை, சுகாதாரம், கல்வி, தெரு

விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்கள் நிதானமாக முன்னேற்றம் அடைவார்கள்.

தொழில் திறன்

இந்த மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. படித்த பெண்களிடம் உள்ள கலை, தொழில் திறனை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய மதிப்பு கிடைத்தால் அவர்களும் முன்னிலைக்கு வருவார்கள். இதை மாநில அரசு செய்ய வேண்டும். உண்டு உறைவிட பள்ளிகளில் இந்த மக்களின் குழந்தைகளுக்கு உரிய இடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் உங்களின் திறமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். கல்வி பயின்று நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

குறைகளை கேட்டறிந்தார்

இதில் ஒவ்வொருவரிடமும் ஜனாதிபதி குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை சொல்ல தயங்கியபோது, அவரே தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவர்களிடம் பேசினார். மேலும் அந்த பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கி மகிழ்ந்தார். இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், பழங்குடியினர் நலத்துறை மந்திரி நாகேந்திரா, சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story