தார்வார் மாநகராட்சியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயர் வைக்க தார்வார் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு:-
ஈத்கா மைதானம்
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் முஸ்லிம்கள் திரண்டு பிரமாண்ட தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். மேலும் முஸ்லிம்கள் தங்கள் மத நிகழ்ச்சிகள், கூட்டங்களை ஈத்கா மைதானத்தில் நடத்துவார்கள்.
இந்த நிலையில் ஈத்கா மைதானத்துக்கு கன்னட வீரமங்கையும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொதுநல மனு
இதற்கு பொதுமக்களிடம் ஆட்சேபனை ஏதும் இருந்தால் ஒரு மாதத்திற்குள் அதுதொடர்பான மனுவை உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் சமர்ப்பிக்குமாறு கடந்த மாதம்(பிப்ரவரி) 8-ந் தேதி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதன்பேரில் உடுப்பியைச் சேர்ந்த உசேன் என்பவர், உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயரை சூட்ட எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டிலும் அதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நேற்று கர்நாடக கோர்ட்டின் தலைமை நீதிபதி பிரசன்ன பாலச்சந்திர வரலே முன்பு விசாரணைக்கு வந்தது.
தள்ளுபடி
அப்போது நீதிபதி, 'உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயரை சூட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மனுதாரர்(உசேன்) மாநகராட்சி நிர்வாகத்திடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை இன்னும் மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்காமல் உள்ளது.
அந்த மனுவுக்கு எதிரான வகையில் மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தால் மனுதாரர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரலாம். அதனால் தற்போது மனுதாரர் தாக்கல் செய்த பொது நல மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்று கூறினார்.