இந்தியாவில் பி.பி.சி.க்கு தடை கோரும் மனு தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆவணப்பட விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பி.பி.சி. செயல்பட தடை கோரிய ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சி. ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பி.பி.சி. வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடிப் பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும், இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு தடை
மேலும், ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.
இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.
ரிட் மனு
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான இந்த ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) உத்தரவிட வேண்டும், இந்தியாவில் பி.பி.சி.க்கு முழுத்தடை விதிக்க வேண்டும் என இந்து சேனை தலைவர் விஷ்ணு குப்தா சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
தள்ளுபடி
அந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர், தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவை விசாரிப்பதற்கு எவ்வித தகுதிப்பாடும் இல்லை என தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.