குட்டையில் தவறி விழுந்து விடிய, விடிய குட்டிகளுடன் பரிதவித்த காட்டு யானைகள்
உணவு தேடி பாக்கு தோட்டத்துக்கு வந்தபோது குட்டையில் குட்டிகளுடன் தவறி விழுந்து காட்டு யானைகள் விடிய, விடிய பரிதவித்தன. அவற்றை வனத்துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.
மங்களூரு-
உணவு தேடி பாக்கு தோட்டத்துக்கு வந்தபோது குட்டையில் குட்டிகளுடன் தவறி விழுந்து காட்டு யானைகள் விடிய, விடிய பரிதவித்தன. அவற்றை வனத்துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அஜ்ஜாவரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஏராளமான காட்டு யானைகள் அந்த கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டு தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் கிராமத்தில் உள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
தென்னை மற்றும் பாக்கு மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர். மேலும் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவே அச்சத்தில் இருந்தனர். விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானைகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து உலா வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் 2 குட்டிகளுடன் அஜ்ஜாவரா கிராமத்தில் புகுந்தன. சனத்ராய் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்துக்கு உணவு தேடி வந்தன.
விடிய, விடிய பரிதவிப்பு
அந்த சமயத்தில் அந்த யானைகள் அங்குள்ள குட்டைக்குள் தவறி விழுந்தன. பின்னர் அவற்றால் வெளியே வரமுடியவில்லை. குட்டிகள் தண்ணீருக்குள் மூழ்கின. இதனால் 4 யானைகளும் குட்டையில் இருந்து வெளியே வர முடியாமல் விடிய, விடிய பரிதவித்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் குட்டையில், அங்கும், இங்குமாக ஓடின.
யானைகள் மீட்பு
இதையடுத்து வனத்துறையினர், குட்டையில் ஒரு பகுதியில் சமதளமாக தோண்டி யானைகள் வெளியே வர நடவடிக்கை எடுத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு 4 யானைகளையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் லாரிகளில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.