2-வது திருமணத்துக்கு இடையூறு: 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை - கேரளாவில் பரபரப்பு


2-வது திருமணத்துக்கு இடையூறு: 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை - கேரளாவில் பரபரப்பு
x

கேரளாவில் 2-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள் நக்ஷத்ரா (6) .அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். வெளிநாட்டில் மகேஷ் வேலை பார்த்த போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மகேஷ் சொந்த ஊர் திரும்பினார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. தொடர்ந்து மகேஷின் தந்தையும் ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் தாய் சுனந்தா (62), மகள் நக்ஷத்ராவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுனந்தா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் நக்ஷத்ராவும், மகேசும் மட்டும் இருந்தனர். அந்த சமயத்தில் நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பதற்றத்துடன் அங்கு சுனந்தா ஓடி வந்தார். வீட்டு சோபாவில் கழுத்தில் வெட்டு பட்டநிலையில் ரத்த வெள்ளத்தில் நக்ஷத்ரா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு கையில் கோடாரியால் மகேஷ் ஆவேசமாக நின்றார்.

பின்னர் திடீரென சுனந்தாவையும் அவர் தாக்கினார். அவர் தடுத்ததால் கையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே அங்கு பொதுமக்கள் திரண்டதால் மகேஷ் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த நக்ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷின் தாயார் சுனந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் மகேசுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததால், பலரும் மகேசுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் மகேசுக்கு தன்னுடைய மகள் மீது வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவேலிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகேஷை சிறையில் அடைத்தனர்.


Next Story