டையூ நகராட்சி கவுன்சில் தேர்தல்; அனைத்து 13 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி
டையூ நகராட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து 13 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
டையூ,
நாட்டில் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, டாமன் மற்றும் டையூவில் உள்ள டையூ நகராட்சி கவுன்சில் தேர்தல் கடந்த 7ந்தேதி நடைபெற்றது என மாவட்ட கலெக்டர் பேபர்மேன் பிரம்மா கூறியுள்ளார்.
இவற்றில், 6 இடங்களில் பா.ஜ.க. போட்டியின்றி வெற்றி பெற்று விட்டது என முன்பே அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 7 இடங்களில் பா.ஜ.க. தவிர்த்து சுயேச்சைகள் போட்டியில் இருந்தனர். இந்நிலையில், இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அவற்றில், 7 இடங்களிலும் பா.ஜ.க.வே வெற்றி பெற்றுள்ளது. இதனால், 15 ஆண்டுகளுக்கு பின்னர் டையூ நகராட்சி கவுன்சிலை பா.ஜ.க. கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து உள்ளது. அக்கட்சி அனைத்து 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திபேஷ் டாண்டெல் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் கட்சியால் ஒரு வேட்பாளரை கூட தேர்தலில் நிறுத்த முடியவில்லை. இந்த மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்பட்டு விட்டது.
இந்த தேர்தல் வெற்றியால், பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த பகுதியில் பா.ஜ.க. மேற்கொண்ட வளர்ச்சி பணிகளால் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.