டி.கே.சிவக்குமார் கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை


டி.கே.சிவக்குமார் கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
x

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருககு சொந்தமான கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. சொத்து ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.

பெங்களூரு:

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவரது வீடு, அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள வீட்டில் ரூ.8½ கோடி சிக்கி இருந்தது. இதுபற்றி அமலாக்கத்துறைக்கு, வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதே விவகாரத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்தது. அத்துடன் அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, மற்றொரு வழக்கையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர். இந்த 2 வழக்குகள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை

கடந்த மாதம்(நவம்பர்) கூட ராமநகர் மாவட்டம் கனகபுராவில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அதாவது ராமநகர் மாவட்டத்தில் டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.க்கு இருக்கும் சொத்துகளின் மதிப்பு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்களை பெற்றதுடன், சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டி.கே.சிவக்குமார் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் நேற்று மதியம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ராஜராஜேஸ்வரி நகரில் குளோபல் டெக்னாலஜி என்ற பெயரில் கல்லூரியும், எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளியும் உள்ளது.

சொத்து ஆவணங்கள் பரிசீலனை

இந்த கல்வி நிறுவனங்களின் சேர்மனாக டி.கே.சிவக்குமார் இருந்து வருகிறார். அவரது மகள் ஐஸ்வர்யா கல்வி நிறுவனத்தின் செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணியளவில் கார்களில் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குளோபல் கல்லூரியில் சோதனை நடத்தினார்கள். அப்போது கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

நிதிப்பிரிவு அறைக்கு சென்று, அங்குள்ள சொத்து ஆவணங்கள், கல்வி நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் பரிசீலனை செய்தனர். அதுபோல், பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள், அவர்களிடம் இருந்து ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது, பிற வரவு, செலவு விவரங்கள், கல்வி நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை சி.பி.ஐ. அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.

தலைவர்கள் குற்றச்சாட்டு

கல்லூரியின் நிர்வாக பிரிவு அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள். இந்த சோதனை 2 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருந்தது. பின்னர் கல்வி நிறுவனத்தில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையின் போது டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் சொத்துகள் பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தனக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. திடீர் சோதனை நடத்தியதால், டி.கே.சிவக்குமார், அவரது மகள் ஐஸ்வர்யா அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சோதனை காரணமாக கல்லூரி மற்றும் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களே இருப்பதால், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை குறியாக கொண்டும், அரசியல் காரணங்களுக்காகவும் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

சி.பி.ஐ. சோதனைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான குளோபல் டெக்னாலஜி கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு, அங்கு படிக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அங்கு படிக்கும் மாணவர்கள் கூறுகையில், எங்கள் கல்லூரியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. திடீரென்று சோதனை நடப்பதாக தகவல் வந்ததும், நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கல்லூரி நடக்கும் போதே இதுபோன்று சோதனை நடத்தி மாணவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது, என்றார்கள்.

டி.கே.சிவக்குமாருக்கு எதிராக ஆவணங்களை திரட்டும் அதிகாரிகள்

சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக ஆவணங்களை திரட்டுவதில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் ராமநகர் மாவட்டத்தில் டி.கே.சிவக்குமாருக்கு இருக்கும் சொத்துகளின் மதிப்பை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி திரட்டி இருந்தனர். தற்போது பெங்களூருவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி, அவற்றின் சொத்து மதிப்புகளை தெரிந்து கொள்ள சோதனை நடத்தி, சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story