சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் விவகாரத்தில் குழப்பம் விளைவித்து மக்களின் நிம்மதியை கெடுக்க கூடாது; டி.கே.சிவக்குமார் பேட்டி


சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் விவகாரத்தில் குழப்பம் விளைவித்து மக்களின் நிம்மதியை கெடுக்க கூடாது; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் விவகாரத்தில் குழப்பம் விளைவித்து மக்களின் நிம்மதியை கெடுக்க கூடாது என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தை பயன்படுத்துவதில் முன்பு என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்க அரசு அனுமதிக்க வேண்டும். பா.ஜனதா உள்பட எந்த அமைப்புகளும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. ஈத்கா மைதானத்தின் வரலாறு, அந்த மைதானத்தை எந்த பெயரில் அழைத்தனர், அதன் ஆவணங்கள் என்ன சொல்கின்றன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

குழப்பத்தை விளைவித்து அதன் மூலம் மக்களின் நிம்மதியை கெடுக்க கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு உரிய ஆர்வத்தை காட்டவில்லை. வெள்ள சேதங்களை பார்வையிடும்படி மந்திரிகளுக்கு முதல்-மந்திரி வேண்டுகோள் விடுக்கும் நிலை தான் உள்ளது. குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அங்கு எந்த நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் சில பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். இதே நிலை நீடித்தால் குடகு மாவட்டத்தில் பா.ஜனதா தனக்கு இருக்கும் 2 தொகுதிகளையும் இழக்க நேரிடும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story