காவிரி நீர் திறக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது பசவராஜ் பொம்மைக்கு தெரியாதா?-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி


காவிரி நீர் திறக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது பசவராஜ் பொம்மைக்கு தெரியாதா?-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி
x

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது பசவராஜ் பொம்மைக்கு தெரியாதா? என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் செய்யக்கூடாது

கர்நாடக விவசாயிகளின் நலனை மறந்து தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர் விடுபவர்கள் நாங்கள் அல்ல. அதுகுறித்த அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இது பசவராஜ் பொம்மைக்கு தெரியாதா?. எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது. கர்நாடக விவசாயிகளின் நலனை காக்க எங்கள் அரசு தயாராக உள்ளது.

அதனால் தான் நாங்கள் ஏற்கனவே 2 முறை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். தமிழ்நாடு 27 டி.எம்.சி. நீர் வழங்குமாறு கேட்டுள்ளது. அவர்கள் கேட்ட அளவுக்கு நாங்கள் தண்ணீர் கொடுக்கவில்லை. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்துவிட்டு சென்றுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர்

இவ்வாறு மோதிக்கொண்டு இருக்க முடியுமா?. ஆட்சியை நடத்துகிறவர்கள் எல்லா ரீதியிலும் யோசிக்க வேண்டும். சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி அரசு செயல்பட வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நமக்கு பெரிய இழப்பு ஏற்படும். விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நமது பேச்சை கேட்க வேண்டும் அல்லவா?.

விவசாயிகளும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம். இதற்கு முன்பும் பல முறை சட்ட போராட்டம் நடத்துள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளில் இந்த ஆண்டு குறைவாக மழை பெய்துள்ளது. இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் நாங்கள் கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளோம். சட்டத்தை மதிக்கிறோம் என்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம்.

கிராமப்புற பள்ளிகள்

நான் 3 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். அதன் மூலம் 3 கிராமப்புற பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story