எல்லா நேரத்திலும் மதவாத அரசியல் செய்யக்கூடாது: பா.ஜனதா மீது கபில் சிபல் தாக்கு


எல்லா நேரத்திலும் மதவாத அரசியல் செய்யக்கூடாது:  பா.ஜனதா மீது கபில் சிபல் தாக்கு
x

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் எடுபடாது என்பதுதான் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா தோல்வியால் அறிய வேண்டிய பாடம் என்று கபில் சிபல் கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மத்திய மந்திரியாக இருந்தவர் கபில் சிபல். கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர், சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அநீதிக்கு எதிராக போராடும் நோக்கத்தில் 'இன்சாப்' என்ற தேர்தல் சார்பற்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கபில் சிபல் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடக தேர்தல் முடிவுகளில் இருந்து அறிய வேண்டிய பாடம்- எல்லா காலத்திலும் ஒரே பொருளை திரும்ப திரும்ப விற்க முடியாது. ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் எடுபடாது. விஷத்தை கக்கக்கூடாது. கடந்த காலத்தை சொல்லி கொச்சைப்படுத்தக்கூடாது.

ஊழல் அரசுடன் சேர்ந்து கொண்டு, மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று சொல்லக்கூடாது. எல்லா நேரத்திலும் மதவாத அரசியல் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்று கபில் சிபல் அறிவுரை கூறியிருந்தார்.


Next Story