காஷ்மீரில் இரட்டை பஸ் வெடிகுண்டு தாக்குதல்; பாகிஸ்தானுக்கு தொடர்பு என தகவல்


காஷ்மீரில் இரட்டை பஸ் வெடிகுண்டு தாக்குதல்; பாகிஸ்தானுக்கு தொடர்பு என தகவல்
x

காஷ்மீரில் இரட்டை பஸ் வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.



ஜம்மு,


காஷ்மீரில் உதாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டொமைல் சவுக்கில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பஸ்சில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி இரவு 10.30 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் பஸ்சின் கண்டக்டர் மற்றும் உள்ளே அமர்ந்திருந்த மற்றொரு நபரும் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தில் காயமடைந்த கண்டக்டர் கூறும்போது, இரவு 7.70 மணியளவில், அடுத்த நாள் காலை ராம்நகருக்கு எடுத்து செல்வதற்காக, பேருந்தின் கூரையில் ஒரு மெத்தை மற்றும் மற்ற இரண்டு பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி கோரி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தன்னை அணுகியதாக போலீசாரிடம் தெரிவித்தார். பேருந்தில் பொருட்களை ஏற்றியவுடன், இருவரும் சென்றனர், அதன் பிறகு சுமார் 3 மணி நேரத்திற்குள் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில், அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

தீவிர விசாரணைக்கு பின்னர், இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

முகமது அஸ்லாம் ஷேக் என்ற அந்த நபர், விசாரணையில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி ராம்நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு பஸ்களிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்தது பற்றி ஒப்பு கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தோடா பகுதியை சேர்ந்த முகமது அமீன் பட் என்ற குபைப் என்பவர் பின்னணியாக செயல்பட்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரிலேயே இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி கூடுதல் காவல் இயக்குனர் ஜெனரல் முகேஷ் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, முகமது அமீன் பட் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர். பாகிஸ்தானிலேயே நிரந்தர குடிமகனாகி விட்ட அவர், அஸ்லாம் ஷேக் என்ற பயங்கரவாதியை சமூக ஊடக செயலிகள் வழியே தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்பின் 3 வெடிகுண்டுகள் மற்றும் 4 புதிய சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை ஆளில்லா விமானம் வழியே வழங்கியுள்ளார். இவற்றில் 5 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27-ந்தேதி முக்கிய மந்திரி வருகைக்கு முன், சரியான பகுதிகளில் வெடிகுண்டுகளை வைக்கும்படி முகமது பட் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, 7 மணிநேரம் டைமர், 14 மணிநேரம் டைமர் என இரண்டு பஸ்களிலும் தலா ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story