வேலையை விட்டு நீக்கிய தொழிலதிபர், குடும்பத்தினர் 6 பேர் கொடூர கொலை; டிரைவருக்கு தூக்கு
தொழிலதிபர் தனது வீட்டில் வேலை செய்துவந்த டிரைவரை நீக்கியுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சந்திர கோயல். இவரது வீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு கார் டிரைவராக வேலை செய்து வந்தவர் ராகுல் வர்மா.
இதனிடையே, 2013 மே 21-ம் தேதி தொழிலதிபர் சதீஷ் வீட்டில் இருந்து 4.50 லட்ச ரூபாய் பணத்தை ராகுல் திருடியுள்ளார். இதுகுறித்து அறிந்த சதீஷ் தனது டிரைவர் ராகுல் வர்மாவை வேலையை விட்டு நீக்கி, போலீசிலும் புகார் அளித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த ராகுல், மே 21 நள்ளிரவு இரவு சதீஷ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 7 பேரை ராகுல் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளான்.
தொழிலதிபர் சதீஷ் சந்திர கோயல், அவரது மனைவி மஞ்சு ரானி, மகன் சச்சின், மருமகள் ரேகா, பேத்தி மேஹா, பேரன்கள் ஹனி, அமென் என மொத்தம் 7 பேரையும் ராகுல் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றான். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ராகுல் வர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ராகுல் வர்மா குற்றவாளி என காசியாபாத் கூடுதல் அமர்வு கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், குற்றவாளி ராகுல் வர்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ராகுல் வர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் வர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.