கர்நாடகத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கர்நாடகத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி இருக்கிறது என்று கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
195 தாலுகாக்களில் வறட்சி
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 195 தாலுகாக்களை வறட்சி பகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வறட்சியால் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் ரூ.4,860 கோடி உதவி கேட்க முடிவு செய்துள்ளோம். 39 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பழைய வாகனங்கள்
போலீஸ் துறையில் உள்ள பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். குன்டிகர் சமூகத்தை மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் சமூக பட்டியலில் சேர்க்குமாறு கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். ஆவணங்களில் கொடவர் என்று உள்ளதை கொடவா என்று மாற்ற முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்,
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகையில், "காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினோம். தற்போது தமிழகத்திற்கு சுமார் வினாடிக்கு 3,500 ஆயிரம் நீர் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. அதேபோல வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேகதாது திட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பேசப்பட்டது. நீதிபதிகள் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கீழ்மட்டத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதற்கு மத்திய அரசின் அனுமதி பெற முடிவு செய்துள்ளோம். தேவையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன் மூலம் விவசாயிகளை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது" என்றார்.