பெங்களூருவில், விற்க முயன்ற ரூ.1.60 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது-கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது


பெங்களூருவில், விற்க முயன்ற ரூ.1.60 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது-கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது
x

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.1.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.1.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு தென்மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

2 பேர் கைது

பெங்களூரு தென்மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொப்பா ரோட்டில் உள்ள ஒரு வணிகவளாகம் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்ய 2 பேர் முயற்சி செய்வது பற்றிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள்.

அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 நபர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்களிடம் ஆசிஷ் ஆயில் எனப்படும் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 நபர்களும் கைது செய்யப்பட்டாா்கள்.அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷெபாக் மற்றும் மங்களூருவை சேர்ந்த ஆஸ்ரிக் என்பது தெரியவந்தது. இவர்களில் ஆஸ்ரிக் மடிவாளா அருகே ஒரு தனியார் தங்கும் விடுதியில் வசித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த ஷெபாக் தனியாக ஒரு யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார்.

ரூ.1.60 கோடி போதைப்பொருள்

இவர்கள் 2 பேரும் எளிதில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக கேரளாவில் இருந்து ஆசிஷ் ஆயிலை பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர். அந்த போதைப்பொருளை தங்கும் விடுதியில் பதுக்கி வைத்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு விற்பனை செய்து 2 பேரும் பணம் சம்பாதித்து வந்தனர். மேலும் கேரளாவை சேர்ந்த ஷெபாக் தான் நடத்தி வரும் யூ-டியூப் சேனலை பின்தொடரும் நபர்களிடமும் போதைப்பொருளை விற்று வந்துள்ளனர்.

கைதான 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் 2 கிலோ 60 கிராம் எடையுள்ள ஆசிஷ் ஆயில் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் பேகூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை விற்ற கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story