ஓடும் ரெயிலில் பெண் பயணியின் கையை பிடித்து இழுத்த டிக்கெட் பரிசோதகர் கைது


ஓடும் ரெயிலில் பெண் பயணியின் கையை பிடித்து இழுத்த டிக்கெட் பரிசோதகர் கைது
x
தினத்தந்தி 9 May 2023 9:09 PM IST (Updated: 9 May 2023 9:10 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பெண் பயணியின் கையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடந்துகொண்ட டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் இருந்து திருவனந்தபுரம் மாவட்டம் கொச்சுவெலி நகருக்கு ராஜா-ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயிலில் எஸ்-4 பெட்டியில் பெண் பயணி ஒவருவர் பயணித்தார். ரெயில் ஆலுவா ரெயில் நிலையத்தை கடந்த நிலையில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் ரெயிலில் ஏறினார்.

மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் தனியாக இருந்த பெண் பயணி அருகே அமர்ந்து அவரின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அத்துமீறி அந்த பெண் பயணியின் கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்துள்ளார். உடனடியாக அந்த பெண் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்த உடன் அதில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 35 வயதான டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட டிக்கெட் பரிசோதகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் டிக்கெட் பரிசோதகர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story