நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லி, ராஜஸ்தானிலும் அதிர்வு - ஒரு பெண் பலி


நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லி, ராஜஸ்தானிலும் அதிர்வு - ஒரு பெண் பலி
x

image courtesy: ANI

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.

புதுடெல்லி,

அண்டை நாடான நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுதுர்பஸ்சிம் மாவட்டம் பஜுரா மாவட்டம் மேளா பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

முதல்கட்ட தகவல்களின்படி, ஒருவர் உயிரிழந்தார். அவர் 35 வயது பெண். கவுமுனி ஊரக நகராட்சியை சேர்ந்த அவர், புல் அறுத்துக்கொண்டிருந்தபோது பாறை உருண்டு வந்து மோதியதில் அவர் பலியானார். பஜுரா மாவட்டத்தில் எண்ணற்ற வீடுகள் இடிந்து விழுந்தன. ஒரு கோவிலில் விரிசல் ஏற்பட்டது. பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 40 ஆடுகள் பலியாகின. ஒருவர் காயம் அடைந்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, மேற்கு நேபாளத்தில் உள்ளது. அப்பகுதி முழுவதும் நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகார் பகுதிக்கு 148 கி.மீ. கிழக்கில் பூகம்பத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது.

எனவே, இந்தியாவிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. டெல்லியின் சில பகுதிகளிலும், தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (என்.சி.ஆர்.), ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரிலும் உணரப்பட்டது. அங்கெல்லாம் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர். டெல்லி மாநகராட்சி கட்டிடத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த உயரமான கட்டிடத்தில் இருந்தவர்கள் அதை உணர்ந்தனர்.

அங்கிருந்த அமித் பாண்டே என்பவர் கூறும்போது, சம்பவத்தின்போது நான் மாநகராட்சி கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்தேன். எனது காலுக்கு அடியில் உறுமும் சத்தம் கேட்டது. கட்டிடம் லேசாக குலுங்குவதை உணர்ந்தேன் என்று கூறினார். டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உயரமான கட்டிடத்தில் வசிக்கும் சாந்தனு என்பவரும் நிலநடுக்கம் பீதி உண்டாக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார்.

மேற்கு நேபாளம் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் பிராந்தியம் ஆகும். அங்கு கடந்த மாதம் அடுத்தடுத்து 3 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நேபாளமே அதிர்ந்தது. சுமார் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 8 லட்சம் வீடுகளும், பள்ளி கட்டிடங்களும் சேதம் அடைந்தன.


Next Story