குடகு, ஹாசன் மாவட்டங்களில் நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது


குடகு, ஹாசன் மாவட்டங்களில் நிலநடுக்கம்  3.4 ரிக்டர் அளவில் பதிவானது
x

குடகு, ஹாசன் மாவட்டங்களில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். ேமலும், ரிக்டர் அளவில் 3.4-ஆக பதிவாகி இருந்தது.

ஹாசன்: குடகு, ஹாசன் மாவட்டங்களில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். ேமலும், ரிக்டர் அளவில் 3.4-ஆக பதிவாகி இருந்தது.

பொதுமக்கள் பீதி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கி விழுந்து சிதறின. சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வால் வீட்டு சுவர்கள் சேதமடைந்தன. ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா நாகரனஹள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மாலுகானஹள்ளி கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த கிராமத்தில் மண்ணால் ஆன வீட்டின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. எனினும், வீட்டில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

இதன் தாக்கம் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் நிலநடுக்கத்தால், பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதிகளை நோக்கி ஓடினர். இதுகுறித்து கர்நாடக பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் கூறியதாவது:-

3.4 ரிக்டரில் பதிவு

கர்நாடகத்தில் ஹாசன் மாவட்டத்தில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தாக்கம் மலைநாடு மாவட்டமான குடகிலும் எதிரொலித்தது. குறிப்பாக சோமவார்பேட்டை தாலுகாவில் உள்ள கிராமங்களில் அதன் தாக்கம் சற்று அதிகமாக தான் இருந்தது. சில பகுதிகளில் வீடுகளில் விரிசல், லேசான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகி உள்ளது. பொதுவாக 6 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் பதிவானால், அது தீவிர நிலநடுக்கமாகும். தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

அந்த பகுதி மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக கூறினர். மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

நடவடிக்கைகள்

அவ்வாறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அதன் பாதிப்புகள் தீவிரமாக இருக்காது. பேரிடர் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் நிலநடுக்கம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவா் கூறினார்.


Next Story