சிவமொக்கா பதற்றமான நிலையில் இருப்பதற்கு ஈசுவரப்பா தான் காரணம்; சித்தராமையா குற்றச்சாட்டு
சிவமொக்கா பதற்றமான நிலையில் இருப்பதற்கு ஈசுவரப்பா தான் காரணம் என்று சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
சிவமொக்கா;
சிவமொக்கா வன்முறை
சிவமொக்கா மாவட்டம் சிகேகட்டியில் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறது. இதனால் சிவமொக்கா பதற்றமான மாவட்டமாக கருதப்பட்டு வருகிறது. வன்முறைகள், மோதல்களை தடுக்க அடிக்கடி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிவமொக்கா இத்தகைய பதற்றமான நிலைக்கு வந்திருப்பதற்கு காரணமே முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தான் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அமைதி சீர் குலைவு
இதுகுறித்து சிவமொக்காவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை செய்யப்பட்டபோது சிவமொக்காவில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. அந்த தடை உத்தரவையும் மீறி நடந்த ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தான் காரணம். தொடர்ந்து அங்கு மக்களின் அமைதி சீர்குலைக்கப்பட்டு வருகிறது. சிவமொக்கா பதற்றமான நிலையில் இருப்பதற்கு ஈசுவரப்பா தான் காரணம்.
நேர்மையாக பணியில் சேரவேண்டிய போலீஸ் அதிகாரிகளிடம் லஞ்சம் பெற்று பணி ஆணை வழங்குகின்றனர். பணம் கொடுத்து வருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும். இவர்களின் லஞ்ச ஆசைக்கு நேர்மையான போலீஸ் அதிகாரியை இழந்துவிட்டோம். இதேபோல பல துறைகளில் கமிஷன், லஞ்சம் பெறப்படுகிறது.
வன்முறையை தூண்ட கூடாது
ஏற்கனவே 40 சதவீத கமிஷன் விவகாரத்தில்தான் ஈசுவரப்பாவின் மந்திரி பதவி பறிபோனது. இருப்பினும் இந்த லஞ்சம், கமிஷன் ஆசை விடவில்லை. கர்நாடக மக்களை இதைப்பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.
கமிஷன் பெற்று கொண்டு குத்தகை வழங்குவது, வன்முறையை தூண்டிவிடும் செயல்களை பா.ஜனதாவும், மந்திரிகளும் கைவிடவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.