பண மோசடி; வருமானவரித்துறை முன்னாள் அதிகாரியின் ரூ. 7.33 கோடி சொத்து முடக்கம்...!


பண மோசடி; வருமானவரித்துறை முன்னாள் அதிகாரியின் ரூ. 7.33 கோடி சொத்து முடக்கம்...!
x

பண மோசடி வழக்கில் வருமானவரித்துறை முன்னாள் அதிகாரியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

புதுடெல்லி,

வருமான வரித்துறையில் சென்னை மண்டல கூடுதல் இயக்குனராக பணியாற்றியவர் ஆண்டசு ரவீந்தர். வருமான வரித்துறையின் பணியாற்றிய காலத்தில் 2005 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ரவீந்தர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ரவீந்தர் மற்றும் அவரது மனைவி கவிதா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. குறிப்பாக, 2011-ம் ஆண்டு லஞ்சம் வாங்கியபோது ரவீந்தரை சிபிஐ கைது செய்தது. ரவீந்தர் மற்றும் கவிதா தங்கள் வருமானத்திற்கு அதிகமாக 171 சதவிகிதம் சொத்து சேர்ந்ததாக சிபிஐ தெரிவித்தது. பின்னர் ரவீந்தர் வருமானவரித்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ரவீந்தர் மற்றும் அவரது மனைவி மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் ரவீந்தர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 7 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.


Next Story