மதுபான உரிம முறைகேடு வழக்கில் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!
டெல்லி,உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, தெலுங்கானா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தியது.
இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மதுபான உரிம முறைகேடு தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. டெல்லி தவிர மற்ற மாநிலங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சி.பி.ஐ. சோதனை நடத்திய நிலையில், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் விசாரணையில் இப்போது அமலாக்க இயக்குனரகமும் நுழைந்துள்ளது.
அதன்படி, டெல்லி ஜோர் பாக்கில் உள்ள தொழிலதிபர் சமீர் மஹந்த்ருவின் வீடு, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள 'பட்டி ரீடெயில் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் இயக்குனர் அமித் அரோரா வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை தலைமையக வட்டாரங்களின்படி, மணீஷ் சிசோடியாவின் வீட்டில் தற்போது சோதனை நடத்தப்படவில்லை.இதுவரை கிடைத்த தகவலின்படி, சிபிஐ விசாரித்ததின் அடிப்படையில் பதிவான எப்ஐஆரில் பெயர் பதிவு செய்யப்பட்ட தனியார் நபர்கள் மீது இன்றைய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, தெலுங்கானா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலஙகளின் பல நகரங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.