கேம் செயலி மூலம் நூதன மோசடி; தொழிலதிபர் வீட்டில் கட்டுகட்டாக கோடி கணக்கில் பணம் பறிமுதல் - பரபரப்பு தகவல்


கேம் செயலி மூலம் நூதன மோசடி; தொழிலதிபர் வீட்டில் கட்டுகட்டாக கோடி கணக்கில் பணம் பறிமுதல் - பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2022 3:36 AM IST (Updated: 11 Sept 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

தொழிலதிபர் வீடு, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ. 17 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்கத்தா,

ஸ்மார்ட் போன் கேம் செயலி மூலம் பண மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

'இ-நட்ஜட்ஸ்' என்று பெயர் கொண்ட அந்த கேம் செயலியில் விளையாடும் நபர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் எழுந்தது. 'இ-நக்கட்ஸ்' கேம் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வரும் சுலபமான புதிர் விளையாட்டை பணம் கட்டி விளையாடினால் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் கட்டும் பணத்திற்கு கூடுதல் பணம் திரும்பி வருகிறது.

பணம் கணக்கில் ஏறிய உடன் நமது செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில், இந்த பணத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் இருமடங்கு பணம் கிடைக்கும் என மெசேஜ் வருகிறது.

அந்த மெசேஜை நம்பி, கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அதில் வரும் லிங்கை கிளிக் செய்து பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், முதலீடு செய்த பின்னர் அந்த பணத்தை அதில் இருந்து திரும்பப்பெற முடியாது. இவ்வாறு 'இ-நக்கட்ஸ்' கேம் செயலி மூலம் பண மோசடி நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து 'இ-நட்ஜட்ஸ்' கேம் செயலியை உருவாக்கியது மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அகமது கானின் மகன் அமீர் கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தொழிலதிபர் அகமது கான் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள தொழிலதிபர் அகமது கானின் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் 17 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 9.30 மணி வரை நடந்த சோதனையில் ரூ. 17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story